Wednesday 17 May 2023

நிர்வாணக் குரல்கள் - சதத் ஹசன் மண்டோ







நிர்வாணக் குரல்கள்

சதத் ஹசன் மண்டோ

தமிழில் : உதயசங்கர்

பதிப்பகம் : நூல்வனம்
விலை : 220
பக்கங்கள் : 144
வகைமை :மொழிபெயர்ப்பு (சிறுகதை தொகுப்பு)
நூலுக்குள்..
எழுதுங்கள் என் கல்லறையில்
இங்கே கிடக்கிறான் சதத் ஹாசன் மண்டோ அவனுடன் சேர்ந்து சிறுகதைக் கலையின் அத்தனை மர்மங்களும் கலைத்திறன்களும் புதைக்கப்பட்டு விட்டன டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன் கடவுளை விட மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான்...
இந்த வாசகத்தை இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் கூறிவிட்டு இன்று அந்த மாபெரும் உன்னத எழுத்தாளன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
ஆனால் அவன் எழுத்துக்கள் இன்றும் பாதிக்கப்பட்ட சமூகத்தால் வெறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சாமானிய மனிதர்களுக்கு நியாயம் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
இடதுசாரி ஆகவும் சோஸலிஸ்ட்டாகவும் முற்போக்கு வாதியாகவும் இருந்த மண்டோ எழுதிய முதல் கதை தமாஷா என்ற ஜாலியன் வாலாபாக் பற்றிய கதை.
சினிமாவிற்கு எழுதிய முதல் கதை தோல்வி. ஆனாலும் தொடர்ந்து சினிமாவிற்கு கதை எழுதினார். பத்திரிகைகளில் எழுதினார். 1940ல் முதல் தொகுப்பும் 1942ல் இரண்டாம் தொகுப்பு 1943 மூன்றாம் தொகுப்பு பிறகு வாழ்நாளில் இரு பெரும் இழப்புகள்.
அம்மாவையும் மூத்த மகனையும் இழந்தபின் அந்த இழப்பின் வலியை வாழ்நாள் முழுவதும் தூக்கி சுமந்தபடியே வாழ்ந்தார்.
நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் மண்டோ மனைவி குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்குப் போய்விட்டார்.
1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு வரை மிகத் தீவிரமான எழுத்தாளராக இயங்கினார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு கதை என்ற வீதத்தில் எழுதி இருக்கிறார்.
ஒரே கதையை வேறு வேறு மாதிரி எழுதியிருக்கிறார். ஒரே கதையின் முடிவுகளை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார். இப்படி புது புது யுக்திகளை தன்னுடைய கதைகளில் நுழைத்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே இருந்த பகைமை தீவிரமாக இருந்த காலத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் மனதின் உணர்ச்சிகளை தாங்க முடியாமல் அதீத குடியுடன் அலைக்கழிந்திருக்கிறார் மண்டோ.
குடி வெற்றி கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் மனநல மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்திருக்கிறார். உணர்ச்சியின் உக்கிரத்தை அவர் எழுதுவதின் மூலமே சமாதானப்படுத்தி இருக்கிறார். அதற்கு குடி தேவைப்பட்டிருக்கிறது.
அவரை சதாகாலமும் போலியான மனித சமூக மனிதர் இருந்த நாகரிகமான ஆடைகளுக்கு பின்னால் இருக்கும் அழுகிய புண்களின் வடிந்து கொண்டிருக்கும் சீல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.
அவருடைய கதைகளுக்கு நீதிமன்றத்தில் ஏறி இருக்கிறார்.
ஒருமுறை தண்டிக்கவும் பட்டிருக்கிறார். ஆனால் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் நடந்த இருண்ட காலத்தின் கதைகளை மட்டுமே மண்டோ பதிவு செய்திருக்கிறார்.
மண்டோவின் கதைகள் நுட்பங்கள் நிறைந்தது. இருளை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடியது.
ஆனால் அந்த வெளிச்சத்தில் இந்த உலகம் பைத்தியக்காரத்தனமாக தெரிந்தது.
எல்லா கதைகளும் துல்லியமான விவரங்களை நேர்த்தியான கதை சொலலுடன் அழுத்தமான கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்டிருப்பது மண்டோவின் மேதமைக்குச் சான்று.
மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமே புது சமூகம் தன்னுடைய மனப்பிறழ்வுகளை கண்டு உணர்ந்து சரி செய்து கொள்ள முடியும். முன்போதிலும் காட்டிலும் இப்பொழுது மண்டோ அதிகம் தேவைப்படுகிறார்.
எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் நிர்வாணக் குரலுக்கு எழுதிய இந்த முன்னுரை மண்டோவின் வாழ்க்கையை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.
கதைகளுக்குள்..
பிஸ்மில்லாவைப் பற்றி கூறியாக வேண்டும். திரைப்படத் தயாரிப்புக்காக ஜாகீரைச் சந்திக்கச் செல்கிறார் சையத். இருவரும் விரைவில் நண்பர்களாகி விடுகிறார்கள். ஜாகிரின் மனைவி பிஸ்மில்லாதான் அவர் எடுக்கவிருக்கும் படத்தின் கதாநாயகி என்று கூறுகிறார்.
பிஸ்மில்லாவின் அந்த பெரிய கண்களில் சோகம் ஒளிந்து இருப்பதை சையத் உணர்கிறார்.
அந்த சோகம் நிறைந்த கண்களுக்குள் பலமுறை பாய்ந்து விழுந்திருக்கிறான் சையத்.
அவனை பல முறை மூழ்கடித்ததும் அவளுடைய பெரிய சோகமான கண்கள்தான். கண்களில் உள்ள சோகத்தின் எல்லாத் தடயங்களையும் கழுவி சுத்தப்படுத்தும் வரை அந்த கண்களை முத்தமிட வேண்டும் என்று தீராத ஆசை அவனுக்கு.
அந்த பெரிய சோகம் நிறைந்த கண்கள் எப்பொழுதும் தூக்க கலக்கத்துடனே இருப்பதை சையத் கவனிக்கிறான். அன்றும் அப்படித்தான் ஜாஹிரே காணச் சென்ற சையத் பிஸ்மில்லாவோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பிஸ்மில்லா உறங்கி விடுகிறார்.
அடுத்த நாள் அவர்களின் வீட்டிற்கு செல்லும் பொழுது பிஸ்மில்லாவைப் பற்றி ஊர் மக்கள் பேசியதும் ஜாகிரை போலீஸ் பிடித்ததும் இந்தக் கதையின் எதிர்பாராத ஒரு திருப்பம் என்னவாக இருக்கும்?
****†***
ஆறுதல் கதையில் சாரதாவுக்கு நேர்ந்த அவமானம் அதன் பிறகான ஆறுதல் வரிகளும் அந்த ஆறுதல் படுத்தும் பொழுது பேசிய பேச்சுக்களும் உளவியல் ரீதியாக நுட்பமாக மனதை படம்பிடித்தது மிக சரியான வார்த்தைகள்.
ஆறுதல் என்பது என்றுமே மிகப்பெரிய தத்துவம் நிறைந்த வார்த்தைகளைத் தேடுவதில்லை.
மிக எளிமையான அன்பு கூறும் வார்த்தைகளையே எதிர்பார்க்கிறது. சில நேரங்களில் மௌனம் கூட ஆறுதல் ஆகிவிடும். சில நேரங்களில் காது கொடுத்தலே அவர்களுக்கு ஆறுதலாகிவிடும்.
நிர்வாணக் குரல்கள் கதை வியப்பின் உச்சம். இப்படி கூட ஒரு மனிதனால் சிந்திக்க முடியுமா? கட்டில்கள் பேசுமா? குரல்கள் துரத்துமா? காமம் ஒரு மனிதனை இப்படி அலைக்கழிக்குமா? ஒரு மனித வாழ்வில் காமத்திற்கான இடம் என்ன?
சுற்றி இருந்து எழுப்பும் குரல்கள் ஒருவனை இப்படித் துரத்துமா? முடிவில் அவனுக்கு மனப்பிறழ்வை ஏற்படுத்துமா? கற்பனைக்கும் அப்பாற்பட்ட கதை.
*********
ஒரு மனிதன் எல்லா இடங்களிலும் பயம் கொண்டே இருக்கிறான். தெனாலி படத்தில் வருவது போல எதற்கெடுத்தாலும் அவனுக்கு பயம் பயம் பயம்.
இந்த பயத்தை எல்லாம் உடைத்து ஒரு நாள் பாலியல் தொழிலாளியிடம் செல்ல நினைக்கிறான். முடிவில் போவானா போவானா என்ற பதட்டத்தோடு கதையை நகர்த்துகிறார். எதுக்குடா இப்படி பயப்படுற என்று நமக்குள்ளே கேள்விகள் எழும் அளவிற்கான கதை நகர்த்துதல்..
அவன் மனது செல்கிறது. அதை அவன் தடுத்துப் பார்க்கிறேன் முடியவில்லை முடிவில் அந்த பயத்தை உடைத்து சென்றானா?
என்பதை அறிய கோழைக்கதை..
***********
திருமணம் ஆகி 5 வருடம் குழந்தை இல்லாத நிலையில் சலிமாவிடம் அவள் தோழி ஒரு கோயிலைப் பற்றிக் கூறுகிறார். அந்தக் கோயிலுக்குச் சென்று எனக்கு பிறக்கும் முதல் குழந்தையை உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று வேண்டினால் குழந்தை பிறக்கும் என்று கூறுகிறார்.
அந்தக் குழந்தை சிறிய தலையுடன் பிறக்கும் என்று கூறுகிறார். சலிமா வேண்டிக் கொள்கிறார். அது போலவே அவளுக்கு குழந்தை பிறக்கிறது.
கன்னத்தில் கருப்பு நிற மசாசத்துடன். வலியோடும் வேதனையோடும் அந்தக் குழந்தையை அந்தக் கோவிலில் கொண்டு சென்று விட்டு விடுகிறார். ஆனாலும் அந்தக் குழந்தையின் நினைவு அலைக்கழிக்கிறது. திரும்பவும் சென்று அங்கு பார்க்கிறார்.
ஆனால் அந்தக் குழந்தை அங்கு இல்லை. அதன் பிறகு இரண்டு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஆனாலும் அந்தக் கன்னத்தில் மச்சத்தோடு பிறந்த குழந்தையை மறக்க முடியாத வலியோடும் வேதனையோடும் சுற்றித் திரியும் பொழுது, அந்த ஊருக்கு வித்தை காண்பிக்க வருகிற ஒரு வித்தைக்கார சிறுவனைப் பார்க்கிறாள். அந்த வித்தைக்கார சிறுவன் கன்னத்தில் கருப்பு நிற மச்சத்தோடு இருக்கிறான்.
யாரவன்?.
குழந்தை இல்லை என்பதற்காக முதல் குழந்தையை தருகிறேன் என்று வேண்டிக் கொண்டாலும் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் ஒரு குழந்தையின் இழப்பு என்பது ஒரு தாயின் மனதை எவ்வளவு அலைக்கழிப்பை ஏற்படுத்தும் என்று நுட்பமான உளவியலை உணர்ந்து ஒவ்வொரு வரியிலும் வலியையும் வேதனையும் கடத்தி இருக்கிறார் மண்டோ.
*********
தோற்றுக் கொண்டிருப்பவன் எல்லாவற்றையும் ஜெயித்த பிறகு அதையெல்லாம் தொலைத்து விடுவதில் மகிழ்ச்சி அடையும் ஒருவனான கதையின் நாயகன்.
அவன் எப்பொழுதும் ஜெயிப்பதற்கு கஷ்டப்படவே இல்லை.
ஆனால் அதை இழப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. இதை படிக்கும் பொழுது அருணாச்சலம் படத்தில் ரஜினியிடம் கொடுக்கப்பட்ட பணத்தைச் செலவு செய்ய வேண்டும் என்ற ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது அதை செலவழிக்க ரஜினி படம் கஷ்டம் நினைவுக்கு வருகிறது.
ஆனால் இந்த கதையின் நாயகனுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படுவதில்லை. ஆனால் இவர் சம்பாதித்த இலட்சக்கணக்கான பணங்களைத் தொடர்ந்து செலவழித்துக் கொண்டே இருக்கிறார் .அதற்காக எவ்வளவு மெனக்கடல்களையும் செய்வார். ஆனாலும் இவருக்கு செல்வம் குவிந்து கொண்டிருக்கிறது. தினமும் கண்டிப்பாக 200 ரூபாயை சூதாட்டத்தில் இழந்தே ஆக வேண்டும் என்று என்ற ஒரு கட்டுப்பாட்டை தனக்குள்ளே விதைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சூதாட்டத்திற்கு போகும் வழியில் ஒரு அசிங்கமான முகத்துடன் கூடிய பாலியல் தொழிலாளி பெண்ணைப் பார்க்கிறார் இனிமேல் நீ இதில் ஈடுபடக்கூடாது நீ சம்பாதிப்பதற்கு மேல் நான் பணம் தருகிறேன் என்று கூறி தினமும் பத்து ரூபாயை அவருக்குக் கொடுக்கிறார்.
ஒரு வாரம் அந்த பெண் அந்த விளக்கிற்கு கீழே வந்து அமரவில்லை ஒரு வாரத்திற்கு பின் வழக்கம்போல தன்னுடைய வாடிக்கையாளர்களை அழைக்கும் இடமான அந்த விளக்கு கம்பத்துக்கு கீழ் வந்து அமர்கிறார். இதைப் பார்த்து எரிச்சல் அடைந்து கோபத்தோடு அவளிடம் சென்று கேட்கிறான்.
அப்பொழுது அந்த பாலியல் தொழிலாளி கைக்காட்டும் இடத்தில் ஏராளமான விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.
**************
யாசித் அதை இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு நடந்த மறைமுகமான யுத்தத்தை பற்றிய கதை.
இந்தியாவிலிருந்து ஆற்று நீரை பாகிஸ்தானுக்கு வர அனுமதிக்க மறுக்கிறார்கள் இந்தியர்கள் என்ற ஒரு செய்தி பாகிஸ்தானுக்குப் பரவுகிறது.
அங்கு இருக்கும் மக்கள் இந்தியாவில் இருக்கும் மனிதர்கள் கொடூரமானவர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரே ஒருவர் மட்டும் அப்படி பேசக்கூடாது எனும்பொழுது அவரை எதிர்த்து அனைவரும் பேசுகிறார்கள்.
அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது வீட்டிற்கு வந்து குழந்தையைப் பார்த்தவுடன் அந்தக் குழந்தைக்கு யாசித் என்ற பெயர் வைக்கிறார். அந்த யாசிப் அங்கு இருக்கும் புராணக் கதைகளில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம்.
பெயரைக் கேட்டதும் மனைவி அதிர்ந்து போக அந்த யாசித் அப்படி இருந்தால் என்ன இந்த ஆசை ஒரு வேலை ஆற்றிலிருந்து நீரை வர வைக்கும் நல்லவனாக இருப்பானோ என்று கூறுகிறார்.
**********
கேள்விக்குறியான கௌரவம் படிக்கும் பொழுது நகைச்சுவை உணர்வு தழும்பி ஓடினாலும் கடைசியாக மீசைக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு மீசையை இழந்தவுடன் அவருடைய கௌரவம் முற்றிலும் அழிந்து விட்டதாக நினைப்பது.
மீசை என்பது மம்மது பாய்க்கு வெறும் மயிர் அல்ல அது அவரின் கௌரவம்..
***************
இப்படி இந்த தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதையைப் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம்.
மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளையும் உளவியல் ரீதியான பல்வேறு சிக்கல்களையும் அந்த சிக்கலுக்குள் மனித மனங்கள் மாட்டிக் கொண்டு விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதையும் வாசிக்கும் பொழுது மண்டோ ஒரு மகத்தான எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு மகத்தான உன்னதமான மனிதனும் கூட என்பதை உணர முடிகிறது.
குறிப்பாக பெரும்பாலான கதைகளில் விளக்கு வந்து செல்கிறது ஒளி அற்றவர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் வருகிறது.
இந்த விளக்காவது அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் தரும் என்று நினைத்தாரோ என்னவோ.
மனதைக் குத்தி கிழிக்கும் நேரத்தில் தெறித்த ரத்தக்கங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் மண்டோ படைப்புகள்.
மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு.
வாசிக்க வாசிக்க ஆக்டோபஸ் கரங்களால் கதைகள் நம்மை உள்ளே இழுத்துக் கொள்கின்றன.
நன்றி - சரிதாஜோ


Friday 4 November 2022

மாரி எனும் குட்டிப்பையன்


 


நூல் : மாரி என்னும் குட்டிப் பையன்

 ஆசிரியர் : உதயசங்கர்

 பதிப்பகம் : அறிவியல் வெளியீடு 

விலை : 65 

பக்கங்கள் : 64 

வகைமை : சிறார் நாவல்

எழுத்தாளர் சரிதாஜோ


தமிழ் சிறார் இலக்கியத்தில் என்றுமே முன்னோடியாக இருப்பது அழ. வள்ளியப்பா. 1950 களில் அழ. வள்ளியப்பா அவர்களின் முன்னெடுப்பு தமிழ் சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒன்று. இடையில் சிறார் இலக்கியம் சிறு தொய்வு கொண்டு இருந்தது. 


2010க்கு மேல் சிறார் இலக்கியம் மீண்டும் சிறகடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஏராளமான எழுத்தாளர்கள் சிறார்களுக்காகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் எனது ஆசான் எழுத்தாளர் உதயசங்கர் நவீன சிறார் இலக்கியத்தின் முன்னோடி என்று கூறுவேன்.


குழந்தைகளுக்காக தொடர்ந்து புதிய வகை மையை அறிமுகப்படுத்துவதில் அதீத ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் படித்த சோசோவின் வாழ்க்கை அதற்கு ஒரு  முன்னுதாரணம்.


 அடுத்த படைப்பான மாரியெனும் குட்டி பையனில் அவர் என்னுரையில் கூறியிருப்பது போல சிறார் கதைகளில் எதார்த்தமான கதைகள் மிக குறைவு. அதைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த மாரியெனும் குட்டி பையன் அமைந்திருக்கிறது. எந்தக் குழந்தைக்கும் அம்மாதான் பிடித்தமான ஒருவராக இருக்கிறார். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு. 


மாரி சிறு பையன் அவனுக்கு எதைப் பார்த்தாலும் பயம்.

இருட்டை பார்த்துப் பயப்படுகிறான். பல்லியைப் பார்த்து பயப்படுகிறான். தேளைப் பார்த்துப் பயப்படுகிறான்.  அம்மா அருகில் இல்லை என்றால் இன்னும் அதிக பயம்.


 அவனுக்கு தைரியமாக இருக்க வேண்டும் என்று ஆசை .

பலசாலியாக இருக்க வேண்டும் என்று ஆசை .

ஆனால் அதெல்லாம் எப்படி நடக்கும் என்ற கேள்வி .

பொதுவாகவே சிறுவயதில் ஒவ்வொரு குழந்தையும் யாராவது ஒருவருடைய கவனம் தன்மீது இருக்க வேண்டும் அவர்களுடைய கவனத்தை தன் பால் இருக்க வேண்டும் என்று அதீத ஆர்வம் இருக்கும்.


. நண்பர்களோடு சேர்ந்து விளையாடும் பொழுது ஏதாவது ஒரு இடத்தில் அங்கீகாரம் கிடைத்து விடாதா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த கதையிலும் அப்படியான ஒரு குழந்தையாகத்தான் மாரி இருக்கிறான்.


குழந்தைகளுக்கு கல்வி மீது ஆர்வம் ஏற்பட ஆசிரியர் மிக முக்கிய காரணமாக இருக்கிறார். மாரிக்கு கோமு டீச்சரை அவ்வளவு பிடிக்கும். யாரையும் அதட்ட மாட்டார். அடிக்க மாட்டார். சத்தம் போடாமல் படிங்க என்று அவருக்கு கேட்காத குரலில் சொல்லும் அளவிற்கான மென்மையான ஆசிரியர். அந்த டீச்சர் மீது எப்பொழுதுமே மாரிக்கு அதிக அன்பு.


 கோமு டீச்சர் வராத நாட்களில் ராமலட்சுமி டீச்சர் வருவார். ராமலட்சுமி டீச்சர் கோமு டீச்சருக்கு நேர் எதிர். 


கோமு டீச்சரின் இறப்பு மாரிக்கு ஏராளமான கேள்விகளைக் கொடுக்கிறது. இறப்பு என்றால் என்ன? இறந்த பின்பு எங்கு செல்வார்கள்? மேலே செல்வார்கள் என்றால் எப்படி செல்வார்கள்? பறந்து செல்வார்களா? அங்கு சென்று என்ன செய்வார்கள்? இப்படியான கேள்விகளை தன் நண்பரிடம் கேட்கிறான் அன்றிரவு கோமு டீச்சர் கனவில் வருகிறார். கோமு டீச்சரோடு இவனும் பறந்து செல்கிறான்.


பள்ளியில் ஒரு முறை வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. ஆனால் மாரி உனக்கு இப்பொழுது தானே இனிப்பு கொடுத்தேன் என்று இனிப்பு வழங்காமலேயே ஆசிரியர் மாரியை அனுப்பி விடுகிறார். வீட்டுக்கு வந்த மாரி தன் அம்மாவிடம் சொல்கிறான். அம்மா பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் இது பற்றி பேசி ஒரு இனிப்பு பொட்டலத்தை வாங்கி கொடுக்கிறார். 


அந்த நேரத்தில் அந்த இனிப்பு வாங்கிக் கொடுப்பதைத் தாண்டி தன் குழந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை சரி செய்ய போகும் ஒரு அம்மாவாக எத்தனை அம்மாக்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்?  அந்த நேரத்தில் தவிர்க்கப்படும் பொழுது அந்த குழந்தையின் மனநிலை என்ன ஆகிறது?

இதைத்தான் யோசிக்க வைக்கிறது இந்த இடம்.


மீண்டும்  இனிப்பு கைக்கு வந்த பிறகு கூட அந்தக் குழந்தை அந்த இனிப்பை தொடவில்லை.

ஒரு அவமானம் ஒரு அவமதிப்பு ஒரு குழந்தையின் மனதில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இதைவிட எப்படிச் சொல்லிவிட முடியும்.


 மாரிக்கு கதை கேட்பதென்றால் கொள்ளை பிரியம் அம்மா அடிக்கடி கதைகள் கூறுவர்.


அம்மா புத்தகம் வாசிக்கும்போது அம்மாவின் முகத்தை கவனிப்பான் மாரி. அம்மாவின் முகம் சில நேரங்களில் சிரிக்கும் யோசிக்கும் வியக்கும் அப்பொழுதெல்லாம் அந்த புத்தகத்திற்குள் அப்படி என்னதான் இருக்கிறது. அம்மா இவ்வளவு நேரம் அதை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்று எடுத்து பார்க்க் தோன்றும் மாரிக்கு.


 அப்படி ஒரு முறை எடுத்து பார்க்கும்பொழுது அந்த புத்தகத்தில் இருந்த கதையின் தலைப்பு வீட்டின் மூலையில் சமையலறை _ அம்பை என்று எழுதியிருந்தது. அந்த புத்தகத்தில் படங்களை இல்லை மாரிக்கு ஆச்சரியம். படங்களே இல்லாமல் ஒரு புத்தகம் எப்படி வாசிக்க முடியும்? வெறும் எழுத்துக்களாக இருக்கிறது என்று பார்த்தான்.


 அதன் பிறகுதான் தன்னுடைய குழந்தை மாரிக்கு அவனுடைய அம்மா புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறார். தனது மடியில் அமர வைத்துக்கொண்டு ஆலிஸின் அற்புத உலகத்தை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறார். அந்தக் குழந்தைக்கு ஒரு புது உலகத்தைக் கொடுக்கிறார். எவ்வளவு அருமையான அம்மாவாக இருக்கிறார். 


மாரியின் அம்மா மட்டுமல்ல மாரியின் நண்பன் கதிரேசனும் கதைகள் கூறுவான். ஆனால் பேய் இல்லாமல் அவன் கதைகள் கூறியதில்லை. முதலிலேயே பயத்தை அதிகமாக தன் மனதில் அப்பிக் கொண்டிருக்கும் மாரிக்கு இவன் கூறும் கதைகள் இன்னும் பயத்தை அதிகப்படுத்தின.


 இருட்டில் செல்லும் போதெல்லாம் அம்மாவின் கைகளை பற்றி கொள்வான் அம்மா எவ்வளவோ தைரியப்படுத்துவார். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை அந்த இருட்டின் முன் நின்று கேள் என்பார்.


 அம்மா என் எல்லாமுமாக இருக்கிறார். என்று அடிக்கடி எண்ணிக் கொள்ளும் ஒரு சிறுவனாக மாரி இருந்தான்.


ஒரு நாள் மாரியும் நண்பர்களும் சேர்ந்து நாடகம் போட தயாரானார்கள் ‌ அப்பொழுது மாரிக்கு தான் கதை எழுதும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது.

அதுவரை ஆயிரம் கதைகள் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தன கேட்டவுடன் அத்தனை கதைகளும் சிறகு முளைத்து பறந்து விட்டன.


மாரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அடுத்த நாள் மாலை அனைவரும் இந்த கதை என்று கேடட்டார்கள். அந்த நிமிடத்தில்  இரண்டு நாட்களுக்கு முன்பு அம்மா கூறிய கதை மனதில் தோன்றியது. அந்தக் கதையைக் கூற அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள். அந்த நேரம் ஆதிமூலம் மாமா அங்கே வர அவரிடம் இந்த கதையை கூற மாரி நீ பெரிய ஆளுதாண்டா என்று கூறினார். அவருடைய வார்த்தை மாறிய என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

மாரி தனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக  கருதினான்.

எத்தனையோ இடர்பாடுகளுக்கு இடையில் விடாமுயற்சியாக நாடகத்தை நடத்தி முடித்தார்கள்.


சின்னச் சின்ன நிகழ்வுகள் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த நாடகம் நடப்பதற்காக குழந்தைகள் செய்கின்ற மெனக்கடல்களை அவ்வளவு அழகாக விளக்கி இருக்கிறார். 


யார் வந்தாலும் வராவிட்டாலும் மழை பெய்தாலும் நடத்திய தீருவது என்ற அவர்களுடைய அந்த பிடிவாதம் நிறைய இடங்களில் என்னுடைய சிறுவயதை ஞாபகப்படுத்தி இருக்கிறது. நான் எப்பொழுதுமே பிடிவாதத்தைப் பிடித்த  பிடிவாதக்காரி. 


நான் சிறுவயதாக இருக்கும் போது ஒரு முறை கூட்டாஞ்சோறு செய்து கொண்டிருக்கும் பொழுது மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த மழைக்கும் இடையேகூட நாங்கள் அவ்வளவு பேரும் சுத்தி நின்று அடுப்பு எரிவதற்காக பாதி வெந்தும் வேகாமலும் இருந்த அந்த கூட்டாஞ்சோற்றை ஆக்கி முடித்து கைகளில் வாங்கி சாப்பிடும் பொழுது இருந்த ருசி என்றுமே நாவில் நின்று கொண்டிருக்கிறது. இன்று வரை எவ்வளவு ருசியான பண்டங்களை சாப்பிட்டாலும் அந்த ருசிக்கு ஈடாகாது.


 இந்த நினைவுகளை தான் நாம் இன்றைய காலகட்ட குழந்தைகளுக்கு கொடுக்க தவறுகிறோமோ என்று ஏராளமான இடங்களில் இந்த புத்தகம் தலையில் கொட்டிக் கொண்டே செல்கிறது. 


குழந்தைகளுடைய உலகை அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்ய வேண்டும். நாம் வாழ்ந்த வாழ்க்கையில் சிறுவயதில் எத்தனை நினைவுகளை மனது தாங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு எந்த நினைவுகள் இருக்கும் பிற்காலத்தில் செல்போனையும் டிவியையும் தவிர.

 குழந்தைகள் மனதில் ஏராளமான நினைவுகள் மலர அவர்களுடைய பால்யத்தை அவர்களிடம் ஒப்படைப்போம். அவர்களோடு சேர்ந்து கைகோர்ப்போம். 


இந்தக் கதை மாரி தன் அம்மாவின் மீது வைத்திருந்த அளப்பரிய அன்பையும் அம்மாவின் மீது வைத்திருந்த அளப்பரிய மதிப்பையும் காட்டுகிறது.


கதையின் தொடக்கத்தில் ஓரிடத்தில் முடிவுகள் எடுப்பதில் நான் கில்லாடி என்ற ஒரு வரி வருகிறது. மாரி தன்னைத்தானே கூறி கொள்வது போன்று உண்மை சிறு வயதில் ஒவ்வொரு குழந்தையும் தான் எடுக்கும் முடிவின் மீது அவ்வளவு அதிக நம்பிக்கை கொண்டிருக்கும். இந்த முடிவுகள் எந்த இடத்தில் தகர்க்கப்படுகிறது. எனக்கு சரியாக முடிவு எடுக்கத் தெரியவில்லை என்று தோன்றும் அளவிற்கு எந்த இடம் அவர்களை இட்டுச் செல்கிறது? யோசிப்போம். 


அவர்களுடைய முடிவுகளை அவர்கள் எடுக்கும் சுதந்திரத்தை பெரும்பாலான நேரங்களில் கொடுக்க தவறிவிடுகிறோம். முடிவெடுக்கும் அதிகாரத்தை விட்டுக் கொடுப்போம் அன்போடு.


 முடிவெடுக்கும் ஒரு சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுப்போம். அது பதின் பருவத்திலும் இருக்கலாம்.

குழந்தையின் ஒவ்வொரு பருவத்தையும் ரசிப்போம் கொண்டாடுவோம்.

வாசிக்க வேண்டிய புத்தகம்.

மாரி எனும் குட்டி பையனின் கதை. 


நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையின் கதை.

Friday 16 September 2022

சேவல் முட்டை

 

சேவல் முட்டை


உதயசங்கர்

வாயில் கவ்விய சேவலுடன் காட்டுக்குள் ஓடியது குள்ளநரி.

இன்று முழுவதும் குள்ளநரிக்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. இரவாகி விட்டது. மலை அடிவாரத்தில் இருந்த காவூர் கிராமத்துக்குள் நுழைந்தது.  நல்ல நிலா வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் குள்ளநரியின் கண்களுக்கு ஒரு சேவல் தெரிந்தது.

ஆகா! கிடைத்தது பெரும் பரிசு! குள்ளநரியின் நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கியது. மெல்லப் பதுங்கிப் பதுங்கி சேவலுக்குப் பின்னால் போய் லபக் என்று ஒரு கவ்வு. அவ்வளவுதான்.

சேவலுக்கு நரி கவ்வியதிலேயே பாதி உயிர் போய் விட்டது. இரவில் எப்போதும் மரத்தின் மீது தான் உட்கார்ந்திருக்கும். இன்று பௌர்ணமி. நல்ல வெளிச்சம். கீழே இரவுப்பூச்சிகள் ஊர்வதும் தாவுவதும் நன்றாகத் தெரிந்தது. அந்தப் பூச்சிகளைத் தின்பதற்காக மரத்திலிருந்து கீழே இறங்கியது. இரண்டு பூச்சிகளைத் தின்பதற்குள் நரி கவ்வி விட்டது.

நடுக்காட்டில் கருவேலமரத்தின் கீழே குள்ளநரியின் வீடு இருந்தது. அந்த முள்ப் புதருக்குள் நுழைந்து சேவலைக் கீழே போட்டது. கீழே விழுந்த சேவல் மெல்ல எழுந்து நின்றது. சேவலின் கழுத்தைப் பார்த்தபடியே,

“ வண்ண வண்ணச் சேவலே

வலிமையான சேவலே..

எண்ணம் போலே தின்னுவேன்..

என் பசிக்கு உன்னையே..

ஊஊஊஊஊஊ… லாலாலல்லா “

என்று பாட்டுப் பாடியது.

அதைக் கேட்ட சேவலின் உடல் நடுங்கியது. ஆனாலும் தைரியமாய் நிமிர்ந்து நின்று,

குள்ள நரியே குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே

இன்று மட்டும் போதுமா

என்றும் சாப்பிட வேண்டாமா

கொக்கரக்கோ கொக்கரக்கோ..

 என்று கூவியது. உடனே குள்ளநரி யோசித்தது.

“ என்ன சொல்கிறாய் நீ? “

என்று கேட்டது குள்ளநரி.

“ சேவல் முட்டை பார்த்திருக்கிறாயா?..என்றது சேவல்.

என்னது சேவல் முட்டையா? கோழி முட்டை தானே உண்டு..

அட அறிவுக்கொழுந்தே…உலகத்தை இன்னும் அறியவில்லையே.. காலம் மாறி விட்டது. இப்போது சேவலும் முட்டையிடும்.. அந்த முட்டையிலிருந்து முழுச்சேவலும் வெளியே வரும்..

என்று சொன்ன சேவலைச் சந்தேகத்துடன் பார்த்தது குள்ளநரி. ஆனால் சேவல் கொஞ்சமும் தயங்கவில்லை.

“ இன்று நீ என்னைச் சாப்பிட்டால் இன்று மட்டும் தான் உன் பசி தீரும்.. ஆனால் என்னை நீ வளர்த்தால் தினம் ஒரு முட்டை இடுவேன். தினம் ஒரு சேவலை நீ சாப்பிடலாம்.. எப்படி..வேண்டுமானால் இதோ இப்போதே என்னைச் சாப்பிட்டு விடு..க்க்கொக்கொ..கொக்கரக்கோ…

என்று சொல்லியது சேவல். குள்ளநரிக்குக் குழப்பமாக இருந்தது. ஒருவேளை சேவல் சொல்வது உண்மையாக இருந்தால்.. தினம் ஒரு சேவல் கிடைக்குமே. உடனே,

“ சரி.. உன்னைச் சாப்பிடவில்லை.. இன்னும் ஒரு வாரத்துக்குள் நீ மூட்டை இடவில்லை என்றால் உன்னைச் சாப்பிட்டு விடுவேன்..தெரிந்ததா..ஊஊஊஊ

அந்தப் புதரிலேயே சேவலை கட்டிப் போட்டுவிட்டு வேறு உணவு தேடி வெளியில் போய் விட்டது குள்ளநரி.

அன்றிலிருந்து தினம் காலையில் எழுந்ததும் குள்ளநரி சேவலிடம்,

“ முட்டையிட்டையா சேவலே..

முட்டையிட்டையா சேவலே

ஆறு நாள் தான் இருக்கு

முட்டையிட்டையா சேவலே..

என்று கேட்கும். அதற்கு சேவல்,

“ குள்ளநரியே குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே

சேவல் முட்டை வேணும்னா

ஒரு வேளை குளிக்கணும்

இரண்டு வேளை கூவணும்

மூணு வேளை மேயணும்

நாலு வேளை பறக்கணும்

அஞ்சு வேளை தூங்கணும்

ஆறு வேளைச் சாப்பிடணும்..

ஏழு வேளை பேன் எடுக்கணும்

குள்ள நரியே குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே “

என்று பதிலுக்குப் பாடும்.

அதன் பிறகு சேவல் ஏவிய அத்தனை வேலைகளையும் குள்ளநரி செய்தது. குள்ளநரி சேவலுக்கும் சேர்த்து வேட்டையாடிக் கொண்டு வந்தது. சேவல் எந்த வேலையும் செய்யாமல் ஹாயாக இருந்தது.

மூன்று நாட்கள் கழிந்தது. காலையில் எழுந்ததும் குள்ளநரி கேட்டது.

“ முட்டையிட்டையா சேவலே..

முட்டையிட்டையா சேவலே..

மூணு நாள் தான் இருக்கு..

முட்டையிட்டையா . சேவலே....

என்று ஊளையிட்டது. அப்போது சேவல்,

.. குள்ளநரியே குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே

மூணுநாள் முடியட்டும்

முட்டை இடுவேன் நான்

குள்ளநரியே குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே “

கடைசியில் ஏழாவது நாளும் வந்தது. இதுவரை ஏமாந்தது போதும் என்று நினைத்தது குள்ளநரி. இன்று சேவல் முட்டை இடவில்லை என்றால் அதைக் கொன்று தின்று விட வேண்டியது தான் என்று நினைத்தது.

ஆனால் ஏழாவது நாள் காலையில் சூரியன் உதித்ததும் சேவல்,

“ குள்ளநரியே குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே

முட்டையிடும் மந்திரம்

என் கூட்டிலே இருக்குதே

பறந்து போய் எடுத்து வர

அனுமதிக்க வேண்டுமே..

குள்ளநரியே.. குள்ளநரியே

கூறுகெட்ட குள்ளநரியே..

என்று கண்ணீர் விட்டது. அதைப் பார்த்த குள்ளநரி,

“ கொக்கரக்கோ சேவலே

முட்டையிடும் சேவலே

இப்போதே பறந்து போய்

மந்திரத்தைக் கொண்டு வா..

காத்திருப்பேன் சேவலே..

என்று சொல்லிக் கட்டியிருந்த சேவலை அவிழ்த்து விட்டது. அப்புறம் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தான் தெரியுமே. உடனே சேவல் புதருக்குள்ளிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று பறந்து போய் விட்டது.

அன்றிலிருந்து தினம்தினம் இரவாகி விட்டால் குள்ளநரிக்கு சேவல் முட்டை ஞாபகம் வந்து விடும். அந்தச் சோகத்தில் தான் இன்னமும், ஊஊஊஊஉ  ஊஊஊஊஉ  என்று ஊளையிட்டுக் கொண்டேயிருக்கிறது.

கேட்கிறதா உங்களுக்கு?

நன்றி - வண்ணக்கதிர்

 

 


 

 

Wednesday 15 June 2022

மண்டு ராஜா போட்ட சாலை

 

மண்டு ராஜா போட்ட சாலை

உதயசங்கர்


மாமண்டுர் நாட்டு ராஜாவான மண்டு ராஜா திடீரென்று ஒருநாள் ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், உலகத்தைக் காப்பாற்ற வந்த உத்தமர் என்று அவனுக்கு சர்வதேச விருது வழங்கும் விழா நடந்தது. அவனுடைய பட்டுச்சட்டையில் பதக்கம் குத்தி அவனை யானை மீது உட்காரவைத்து ஊர்வலமாய் அழைத்துச் சென்றார்கள். மக்கள் எல்லாரும் பூமழை தூவினார்கள். காலையில் கண்விழித்தவுடன் அவனுடைய மந்திரியை அழைத்து,

“ மகா மந்திரியாரே நான் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமே! உடனே செய்ய வேண்டும்.. நான் கனவில் கண்ட விருது வழங்கும் விழாவை நடத்த வேண்டும்.. “

என்று சொன்னான். உடனே மந்திரி,

“ அதுக்கென்ன அரசே! உடனே செய்து விடலாம்.. நமது நாட்டிலேயே மிகவும் ஏழையின் குடிசைக்கு சாலை வசதி செய்து கொடுக்கலாம்.. அதற்கு உலகவங்கியிடம் கடன் வாங்கலாம்.. அந்தச் சாலை போடும் திட்டத்தை உங்கள் மகனுக்கேக் கொடுத்து விடலாம்..”

என்று சொன்னான். மண்டு ராஜா முகத்தில் மகிழ்ச்சி.

“ ஆகா! நல்ல திட்டமாக இருக்கிறதே! உடனே செய்யுங்கள். நமது நாட்டில் வாழும் பரமஏழையை நாளையே அழைத்து வாருங்கள்..”

என்று சொல்லி விட்டு அடுத்த கனவைக் காணத் தூங்கி விட்டான். மறுநாள் காலை மண்டுராஜா கண் விழித்தபோது, எதிரே கந்தல் உடையில் ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். முகத்தைச் சுளித்த மண்டு ராஜா,

“ யாரையா நீர்? ..” என்று கேட்டான். அந்தப்பெரியவர்,

“ அரசே! என்னைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் அழைத்ததாகச் சொன்னார்கள்..”

என்று சொன்னார்.

“ ஓ நீர் தான் நாட்டிலேயே ஏழையாக இருப்பவரா? உமக்கு நல்ல காலம் பிறக்கப்போகுது.. உங்கள் வீட்டுக்குச் சாலை வசதி வரப்போகிறது.. அதுவும் உமது பெயரையே அந்தச் சாலைக்கு வைத்து விடலாம்..… நானே வந்து சாலையைத் திறந்து வைக்கிறேன்..என்ன மகிழ்ச்சி தானே..”

 ” அரசே! ஏற்கனவே மண்சாலை இருக்கிறது.. எனக்கு வேண்டியது எல்லாம் என்னுடைய நிலத்துக்குத் தண்ணீர் வேண்டும்.. பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கின்றன.. தண்ணீர் வருவதற்கு வாய்க்கால் வெட்டிக் கொடுத்தீர்கள் என்றால் நான் என் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வேன்.. “

என்று வேண்டினார். அதைக்கேட்ட மண்டு ராஜாவுக்குக் கோபம் வந்து விட்டது.

“ உமக்கு எவ்வளவு பெரிய நன்மை செய்கிறேன்.. சாலை வந்தால் கார், பஸ், எல்லாம் உங்கள் வீடு வரை வரும்.. எவ்வளவு பெரிய முன்னேற்றத்தை உங்களுக்கு அரசாங்கம் கொடுக்கிறது.. புரியவில்லையா? “

என்று கத்தினார்.

“ இல்லை ராஜா.. அதனால் என்னுடைய நிலத்துக்குத் தண்ணீர் கிடைக்குமா? “

“ முட்டாளே! நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. நீ என்ன புலம்பிக் கொண்டிருக்கிறாய்.. போ.. உன்னுடைய சாலையைப் பார்த்துப் பெருமைப்படு..

என்று கத்தினான் ராஜா. அந்தக் கூச்சலைக் கேட்ட அந்தப் பெரியவர் பயந்து போய் விட்டார். அந்தப் பெரியவரின் பெயரான மண்ணாங்கட்டி சாலை அரண்மனையிலிருந்து போடப்பட்டது. ராஜா கொஞ்சம் சாலையைத் தின்றார்.  மந்திரி கொஞ்சம் சாலையைத் தின்றார். பெரிய அதிகாரி கொஞ்சூண்டு சாலையைத் தின்றார். குட்டி அதிகாரி இத்தினியூண்டு சாலையைத் தின்றார். மேஸ்திரி துளியூண்டு சாலையைத் தின்றார். கடைசியில் சாலையின் நீளம் குறைந்தது. அப்படியே குறைந்து குறைந்து மண்ணாங்கட்டியின் குடிசைக்கு இரண்டு கிலோ மீட்டர் முன்னாலேயே  நின்று விட்டது.

மண்ணாங்கட்டி குடிசை வரை இருந்த மண்சாலையையும் தோண்டி பள்ளமாக்கி விட்டார்கள். இப்போது மண்ணாங்கட்டிக்கும் ஊருக்கும் நடுவில் பெரிய பள்ளம் இருந்தது. மண்டு ராஜா ஒருநாள் அந்தச் சாலையில் வந்தார். இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்து மண்ணாங்கட்டியைப் பார்த்துக் கையசைத்தார். அந்தச் சாலை முடியும் இடத்தில் மண்ணாங்கட்டி சாலை என்று பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார். கையை அசைத்து டாட்டா காட்டிவிட்டுப் போய் விட்டார்.

மண்ணாங்கட்டி இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்ணீரைப் பார்த்த தேவதைகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு சொடக்கு போட்டார்கள்.

அவ்வளவு தான்.

மண்ணாங்கட்டியின் குடிசையைச் சுற்றி தண்ணீர் ஓடியது. காய்ந்து கொண்டிருந்த பயிர்களில் பாய்ந்தது. பயிர்கள் மகிழ்ச்சியுடன் தலையாட்டின. அரைகுறையாகப் போடப்பட்டிருந்த சாலை மண்ணாங்கட்டியின் வீடு வரை நீண்டு வந்தது.  ஆனால் அதே நேரம் மண்டு ராஜா, மந்திரி, பெரிய அதிகாரி, சின்ன அதிகாரி, மேஸ்திரி எல்லோருடைய வீடுகளைச் சுற்றி இருந்த சாலைகள் மறைந்தன. பெரிய பெரிய பள்ளங்கள் தோன்றி விட்டன.

காலையில் கண்விழித்து வெளியில் வந்த மண்டு ராஜாவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

உங்களுக்குத் தெரியும் தானே. அவர்களிடம் சொல்லி விடாதீர்கள். சரியா?

நன்றி - வண்ணக்கதிர்

Tuesday 12 October 2021

கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் - நாடோடிக்கதை

 

கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும்

உதயசங்கர்


ஒரு ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் தனியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எட்டு மக்கமார் இருந்தாலும் அவர்கள் எல்லாரும் கலியாணம் முடிந்ததும் கிராமத்தை விட்டு நகரத்துக்குப் போய் விட்டார்கள். அதனால் பெருசுகள் ரெண்டும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துக் கொண்டு கிடந்தார்கள். ஒரு காலத்தில் நல்ல கெதியாக நிலபுலன்களோடு இருந்தவர்கள் தான். தங்களுடைய பிள்ளைகளுக்காக அந்த நிலபுலன்களையெல்லாம் விற்று அவர்களைப் படிக்க வைத்து வேலை வாங்கிக்கொடுத்து கலியாணம் முடித்து விட்டார்கள். இப்போது அந்த கிராமத்தில் அல்லுசில்லான வேலைகளைப் பார்த்துக் கொண்டு அதில் கிடைக்கிற தானிய தெவசங்களை வாங்கி சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு கிடந்தார்கள்.

ஊரிலுள்ள சொந்தக்காரர்கள் அவர்களைச் சாப்பிடக் கூப்பிட்டாலும் போகமாட்டார்கள். உழைத்துச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தார்கள். கூலிக்கு வேலைபார்த்து கிடைப்பதைக் கொண்டு வாழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். பாட்டி பயிர்களில் களையெடுப்பாள். அருகு வெட்டுவாள். தாத்தா ஏர் ஓட்டுவார். விதை விதைப்பார். இப்படியாக நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் தாத்தாவுக்கு ஒரு ஆசை வந்தது. கத்தரிக்காய் குழம்பு வைத்து சாப்பிடவேண்டும். ஒரு வாரமாகக் கம்பங்கூழே சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்குச் செத்துப் போச்சு. நெல்லுச்சோறு பொங்கி கத்தரிக்காய் காரக்குழம்பு வைத்து ஒரு மொக்கு மொக்கவேண்டும் என்று நினைத்தார். பாட்டியிடம் சொன்னார். பாட்டிக்கும் ஆசை வந்து விட்டது. அடுக்குப்பானையில் கொஞ்சம் நாட்டுச்சம்பா அரிசி கிடந்தது. இரண்டு பேருக்கும் அது போதும். கத்தரிக்காய் வேண்டுமே. ஊருக்கு வடகடைசியில் அவர்களுடைய பங்காளி வீட்டுத் தோட்டத்தில் கத்தரிக்காய் போட்டிருந்தார்கள்.

மறுநாள் பாட்டி அந்தத் தோட்டத்துக்குப் போய் பங்காளி வீட்டுக்காரர்களிடம் குசலம் விசாரித்து விட்டு அப்படியே ஒரு பத்து பிஞ்சு கத்தரிக்காய்களைப் பறித்து மடியில் கட்டிக்கொண்டு வந்தாள். கத்தரிக்காய்களை ஒரு ஏனத்தில் எடுத்து வைத்து விட்டு வீட்டுக்கு வந்து விறகு அடுப்பில் தாத்தா பொறுக்கிக்கொண்டு வந்திருந்த காய்ந்த சுள்ளிகளை வைத்து சோறு பொங்கினாள். சோறு பொங்கிக்கொண்டே கத்தரிக்காய்களை நறுக்கி வைக்க எடுத்தாள். பத்து கத்தரிக்காய்களுக்கு ஒன்பது கத்தரிக்காய்கள் தான் இருந்தது. பாட்டி மடிச்சேலையை உதறிப் பார்த்தாள். வீடு முழுவதும் தேடிப்பார்த்தாள். அவளுக்கே சந்தேகம் வந்து விட்டது. தான் பறித்து வந்தது பத்தா? ஒன்பதா?

அப்போது அடுப்புக்குப் பின்னாலிருந்து அய்யய்யோ சுடுதே அப்பப்பா சுடுதே என்று சத்தம் வந்தது. பாட்டி அடுப்புக்குப் பின்னல் பார்த்தாள். அங்கே ஒரு கத்தரிக்காய் சூடு தாங்காமல் குதித்துக் கொண்டிருந்தது. பாட்டி அந்த கத்தரிக்காயை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் போட்டாள். கத்தரிக்காய் அதில் நீச்சலடித்துக்கொண்டு மிதந்தது. பாட்டி எல்லாக்கத்தரிக்காய்களையும் நறுக்க எடுக்கும்போது அந்தக் கத்தரிக்காய் மட்டும்,

“ பாட்டியம்மா பாட்டியம்மா

பாசமுள்ள பாட்டியம்மா

அண்ணனுக்கு அண்ணனாக

தம்பிக்குத் தம்பியாக

மகனுக்கு மகனாக

பேரனுக்குப் பேரனாக

உங்க கூட நானிருப்பேன்

என்னை மட்டும் நறுக்காதீங்க

பாட்டியம்மா பாட்டியம்மா

என்று பாட்டுப்பாடியது. அதைக்கேட்ட பாட்டியும் பதிலுக்குப் பாடினாள்.

குட்டிக்குட்டிக் கத்தரிக்கா

குள்ளக்குள்ளக் கத்தரிக்கா

தண்ணீ எடுக்கணும்

தவிடு பொடைக்கணும்

களை எடுக்கணும்

விதை விதைக்கணும்

விறகு பொறுக்கணும்

வீட்டு வேலை எல்லாத்தையும்

வேளாவேளைக்குச் செய்யணும்

என்று பதில் பாட்டுப்பாடினாள். கத்தரிக்காய் குள்ளனுக்கு மகிழ்ச்சி.

இட்டவேலை தட்டமாட்டேன் பாட்டியம்மா

இன்று முதல் நான் உனக்குப் பேரனம்மா

என்று சொல்லி வேலை பார்க்க ஆரம்பித்து விட்டது. பாட்டி நாள் முழுவதும் பூனாம்பூனாம் என்று செய்கிற வேலைகளையெல்லாம் கத்தரிக்காய் குள்ளன் அஞ்சு நொடியில் செய்து முடித்தான். வேலை முடிஞ்சதும் ஊர்சுற்றிப்பார்க்கக் கிளம்பி விடுவான்.

அப்போது  பக்கத்து கிராமத்தில் உள்ள கழுகுமலையில் கழுகின் தலையுடனும் பிரம்மாண்டமான இறக்கைகளுடனும் ஒரு பூதம் வாழ்ந்து வந்தது. அந்த பூதம் அங்கிருந்த குழந்தைகளையெல்லாம் தூக்கிக் கொண்டு போய் விட்டது என்று மக்கள் புலம்பினார்கள்.  அந்த பூதத்தைப் பார்த்ததுமே குழந்தைகள் வசியமாகி அப்படியே பின்னாலேயே போய் விடுகிறார்கள் என்றும் அதன்பிறகு அந்தக்குழந்தைகள் அந்த பூதத்துக்கு அடிமைகளாகவே வாழவேண்டியது தான் என்று அந்த ஊர்க்காரர்கள் சொன்னார்கள். கத்தரிக்காய் குள்ளனுக்குப் பாவமாக இருந்தது. அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தான்.

மறுநாள் தாத்தா பாட்டியிடம், ஒரு நெல், ஒரு புல், ஒரு கல், வேண்டும் என்று கேட்டான் கத்தரிக்காய் குள்ளன். தாத்தாவும் பாட்டியும் அவன் கேட்டதைக் கொடுத்தார்கள். எல்லாவற்றையும் தன் மடியில் கட்டிக்கொண்டு புறப்பட்டான்.

போகும்வழியில் ஒரு தீ எறும்பு வந்தது. அது கத்தரிக்காய் குள்ளனைப் பார்த்து,

“ எனக்கு ரொம்பப்பசியா இருக்கு.. எனக்கு அந்த நெல்லைத் தருகிறாயா? “ என்று கேட்டது. உடனே கத்தரிக்காய் குள்ளன் அவனிடமிருந்த நெல்லைக் கொடுத்தான். அதைச்சாப்பிட்டா தீ எறும்பு,

“ நண்பா! நான் தீ எறும்புகளின் ராஜா… நல்ல நேரத்தில் நீ எனக்கு உணவளித்தாய்.. நீ எங்கு எப்போது நினைக்கிறாயோ அப்போது நான் அங்கு அப்போது வருவேன்..”

என்றது. கத்திரிக்காய் குள்ளனும் சரி என்று சொல்லிவிட்டு கழுகுமலை பூதத்தைத் தேடி நடந்தான். அப்போது ஒரு வெட்டுக்கிளி குறுக்கே வந்தது.

“ நண்பா! நீ வைத்திருக்கும் புல்லைத் தரமுடியுமா? நான் சாப்பிட்டு ரெண்டு நாட்களாகிறது.. ” என்றது. உடனே கொஞ்சமும் யோசிக்காமல் கத்தரிக்காய் குள்ளன் அந்தப்புல்லை எடுத்துக் கொடுத்தான். அதைச்சாப்பிட்ட வெட்டுக்கிளி,

“ நன்றி நண்பா! நீ எப்போது என்னை நினைத்தாலும் நான் அங்கு வருவேன்..” என்று சொன்னது. கத்தரிக்காய் குள்ளனும் சரி என்று சொல்லிவிடு கழுகுமலை பூதம் இருக்கும் மலையில் ஏறினான். கழுகுமலையின் உச்சியில் கழுகு வடிவத்தில் ஒரு கோட்டை இருந்தது. அந்தக் கோட்டையைச் சுற்றி காவலுக்கு நூறு கழுகுகள் வட்டமிட்டு சுற்றிக் கொண்டிருந்தன. என்ன செய்வது? என்று யோசித்தான் கத்தரிக்காய் குள்ளன். அப்போது ஒரு மலை எலி வந்தது.

“ நண்பா! உன்னிடமிருக்கும் கல்லைக் கொடுக்க முடியுமா? என்னுடைய வளையில் குட்டிகளுக்குப் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறேன்.. “ என்றது. உடனே கத்தரிக்காய் குள்ளன் சரி என்று கொடுத்து விட்டான்.

“ நன்றி நண்பா.. உனக்கு என்ன உதவி வேண்டும் என்று சொல்.. நான் செய்கிறேன்..” என்று கேட்டது மலை எலி.

“ நான் கழுகுகளின் கண்களில் படாமல் கழுகுமலைக்கோட்டைக்குள் போகவேண்டும்… அதற்கு உதவி செய்வாயா? “ என்று கேட்டான் கத்தரிக்காய் குள்ளன்.

உடனே அந்த மலை எலி ஒன்றும் சொல்லாமல் வளைக்குள் சென்றது. பின்னர் திரும்பி வந்து கத்தரிக்காய் குள்ளனுக்கு முன்னால் செத்தமாதிரி விழுந்தது. பார்த்தால் அங்கங்கே எலிகள் செத்தமாதிரி கிடந்தன. அதைப் பார்த்த கோட்டையைக் காவல் காத்துக்கொண்டிருந்த நூறு கழுகுகளும்  அந்த எலிகளைச் சாப்பிடப் பறந்து வந்தன. அதுதான் சமயம் என்று கத்தரிக்காய் குள்ளன் கோட்டைக்குள் நுழைந்து விட்டான். கத்தரிக்காய் குள்ளன் கோட்டைக்குள் நுழைந்துதும் மலை எலி ஒரு சத்தம் கொடுத்தது. உடனே எல்லா எலிகளும் அருகிலிருந்த வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்டன. பறந்து வந்த கழுகுகள் ஏமாந்து போய் விட்டன.

கோட்டைக்குள் நுழைந்த கத்தரிக்காய் குள்ளன் கழுகுமலை பூதம் எங்கே இருக்கிறது என்று தேடினான். அப்போது ஒரு இடத்தில் குழந்தைகள் கூட்டமாய் இருந்தார்கள். அவர்களுக்கு முன் கழுகுமலை பூதம் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய பேச்சைக்கேட்டு குழந்தைகள் சிரித்தார்கள். அழுதார்கள். அப்படிப் பேசிக்கொண்டே அவன் அவர்கள் ஒவ்வொருவராக தூக்கிச் சாப்பிட்டான். குழந்தைகள் சிரித்துக் கொண்டே அவனுடைய வாய்க்குள் போனார்கள். கத்தரிக்காய் குள்ளனுக்குக் கோபம் வந்தது. அவன் கழுகுமலை பூதத்துக்கு முன்னால் போய் நின்றான்.

“ ஏ பூதமே! குழந்தைகளை உடனே விடுதலை செய்! இல்லையென்றால் உன்னை அழித்து விடுவேன்..” என்றான் கத்தரிக்காய் குள்ளன். அவனைப் பார்த்த பூதம் ஏளனமாகச் சிரித்துக்கொண்டே,
“ டேய் குள்ளப்பயலே! நீயாவது என்னை அழிப்பதாவது.. ஒவ்வொரு குழந்தையாகச் சாப்பிட்டு இந்த உலகத்தில் குழந்தைகளே இல்லாமல் செய்து விடுவேன்.. ஏனென்றால் குழந்தைகள் தான் அன்பையும் நட்பையும் பாசத்தையும் நேசத்தையும் விதைக்கிறார்கள்..  அவர்கள் இல்லையென்றால் பெரியவர்கள் போட்டி பொறாமை வஞ்சகம் என்று சண்டை போட்டுக் கொண்டு வாழ்வார்கள்.. அதுதான் எனக்கு வேண்டும் நான் சுலபமாக இந்த உலகத்தை ஆண்டுகொள்வேன்… ஏகச்சக்கரவர்த்தியாகஇருப்பேன்.. ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா..” என்று கோட்டை அதிரச் சிரித்தான் கழுகுமலை பூதம்.

கத்தரிக்காய் குள்ளன் உடனே தீ எறும்புகளை நினைத்தான். தீ எறும்புகள் அந்தக் கோட்டையின் சுவர் இடுக்குகளின் வழியே படை படையாக வந்தன. அப்படியே கழுகுமலை பூதத்தின் கண்காது மூக்கு வாய் என்று எல்லாவழிகளிலும் லட்சக்கணக்கில் நுழைந்தன. கழுகுமலைப்பூதம் அலறினான். அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

“ ஐய்யோ எரியுதே ஐய்யோ எரியுதே.. ” என்று கத்தினான். அவனுடைய உடல் ஓட்டை ஓட்டையாகி உடைந்தது. உள்ளேயிருந்து அவன் சாப்பிட்ட குழந்தைகள் எல்லாரும் நலமுடன் வந்தார்கள். ஆனாலும் கழுகுமலை பூதம் சாகவில்லை. அப்போது கத்தரிக்காய் குள்ளன் வெட்டுக்கிளிகளை நினைத்தான். உடனே வெட்டுகிளிகள் கூட்டம் கூட்டமாக பறந்து வந்தன. அவை எல்லாம் சேர்ந்து கழுகுமலை பூதத்தின் உடலைத் தூக்கிக் கொண்டு போய் கடலில் போட்டன. கடலில் இருந்த திமிங்கிலங்கள் பூதத்தைக்கிழித்து தின்றன.

கத்தரிக்காய் குள்ளன் குழந்தைகள் படைசூழ கிராமத்துக்குத் திரும்பினான். பாட்டியும் தாத்தாவும் நாட்டு மக்களும் குழந்தைகளும் கத்தரிக்காய் குள்ளனை உச்சி மோந்து பாராட்டினார்கள்.

உலகில் அன்பும் பாசமும் நேசமும் நட்பும் தழைத்தோங்கியது.

நன்றி - வண்ணக்கதிர்


 

Saturday 9 October 2021

காப்பித்தண்ணியும் கழனித்தண்ணியும் – சிறார் கிராமியக்கதை

 

காப்பித்தண்ணியும் கழனித்தண்ணியும் –


சிறார் கிராமியக்கதை

உதயசங்கர்

அந்த ஊரிலேயே வசதியான சம்சாரிக்கு ரொம்ப நாளா குழந்தையில்லை. அந்தம்மா வயித்தில ஒரு புழு பூச்சி கூட உண்டாகலை. இவ்வளவு சொத்துபத்து இருந்தும் ஆண்டு அனுபவிக்க ஒரு பிள்ளை இல்லியேன்னு அந்தம்மாவுக்கு ஒரே வெசனம். நாம செத்தா கொள்ளிபோட ஒரு பிள்ளையில்லியேன்னு அந்த சம்சாரிக்கு கவலை. பிள்ளைக்காக அவுக போகாத கோயிலில்ல. வேண்டாத தெய்வமில்ல. செய்யாத வயணமில்ல. அக்னிச்சட்டி எடுத்தாக. கூழு காச்சி ஊத்துனாக. அங்கபிரதட்சணம் பண்ணுனாக. சோசியர்களைப் போய்க் கேட்டாக. சாமியார்களைப் போய்ப்பார்த்தாக. வைத்தியர்கள்கிட்ட போனாங்க. பத்தியம் இருந்தாக. ஆனா எதுவும் நடக்கல. ரெண்டுபேருக்கும் கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை குறைஞ்சி கிட்டே வந்தது.

கடசியில ஒரு டவுணுக்கு புதுசா வந்திருந்த ஒரு டாக்டரம்மாவப் போய்ப்பார்த்தாக. அந்தம்மா என்னெல்லாமோ டெஸ்டுகளை எடுக்கச்சொல்லிப்பாத்தது. எல்லாம் நல்லாத்தானே இருக்கு.. என்ன காரணம்னு மண்டைய போட்டு உடைச்சிக்கிட்டருந்தது… .சும்மானாச்சுக்கும் அது நீங்க ரெண்டுபேரும் தனியா குத்தாலம் போய் மூணு நாள் இருந்துட்டு வாங்க. அப்ப இன்னின்ன பதார்த்தங்களைச் சாப்பிடுங்க. இது வெளிநாட்டு வைத்தியமுறை. அப்படின்னு சொல்லி அனுப்பிட்டாக.

அவுகளும் குத்தாலம் போய் மூணுநாள் தங்கி நல்லாகுளிக்க, திங்க, தூங்க, இருந்துட்டு ஊருக்கு வந்தாக. மாயம் போல அடுத்த பத்துமாசத்துல ஒரு ஆம்பிளப்பிள்ளய பெத்துட்டா அந்தப்பொண்ணு. பிள்ளய தங்கத்தட்டுல வச்சித் தான் பாத்துகிட்டாக. அப்படித்தான் தாங்கு தாங்குன்னு தாங்கினாக. பிள்ளை என்ன கேட்டாலும் உடனே கிடைச்சிரும்.  அதவிட வேற வேலை! பயல் பள்ளிக்கூடம் போனான். அந்த ஊரில் பள்ளிக்கூடம் சரியில்லன்னு பக்கத்து டவுனுக்கு அனுப்புனாக. பத்திரமாக கூட்டிட்டுப் போய் கூட்டிட்டு வர்ரதுக்குன்னு ஒரு ஆளயும் அமத்துனாக.

அப்படிப் போய்க்கிட்டிருக்கும் போது பயல் ஒரு நாள் அவனுடைய சிநேகிதனுடைய வீட்டுக்குப் போனான். சிநேகிதனுடைய அம்மா டவுனு வழக்கப்படி பயலுக்கு காப்பித்தண்ணியைப் போட்டுக் கொடுத்துச்சி. சீனி போட்ட அந்த செவலை நிறத்தண்ணியைக் குடிச்சதும் பயல் அப்படியே கிறங்கிப்போனான். அப்படி அமிர்தமா இருந்துச்சி அவனுக்கு. உடனே இனிமே நாமளும் நெதமும் இந்தக்காப்பித்தண்ணியை வீட்டுல காய்ச்சித்தரச் சொல்லணும்னு மனசுக்குள் நெனச்சிக்கிட்டான். அம்மாகிட்ட சொல்றதுக்காக காப்பித்தண்ணி காப்பித்தண்ணி காப்பித்தண்ணின்னு மனப்பாடம் பண்ணிக்கிட்டே வந்தான். அப்போ அந்த சிநேகிதன் வீட்டுக்கு வந்த பால்க்காரர் பாலைக்கொடுத்துட்டு அம்மா கழனித்தண்ணி இருக்கான்னு கேட்டாரு. அவரு கேட்டதும் பயலுக்கு காப்பித்தண்ணி கழனித்தண்ணியா மாறிட்டது. கழனித்தண்ணி கழனித்தண்ணி கழனித்தண்ணின்னு சொல்லிகிட்டே ஊருக்கு வந்தான்.

நேரே அம்மாகிட்டே போய் “ யெம்மா நாளைக்கி காலைல குடிக்கிறதுக்கு எனக்கு கழனித்தண்ணி வேணும்..னு சொன்னான். அம்மா அதைக் கேட்டுட்டு தமாசுன்னு நெனச்சிகிட்டு சிரிச்சிக்கிட்டே அதுக்கென்ன ராசா தாராளமா குடின்னு சொல்லிட்டா. மறுநாள் காலைல எந்திச்சதும் மொதவேலையா குடிக்க கழனித்தண்ணியக் கேட்டான் பயல்.

மாடு குடிக்கிறதப்போய் கேக்கிறியே ராசா..ன்னு அவனோட அய்யா சொன்னாரு. அவன் சடச்சிக்கிட்டு மூஞ்சியத் தூக்கி வைச்சிகிட்டான். அப்ப டவுனில எல்லாரும் குடிக்காகன்னு சொல்லி அழுதான். இதென்னடா பாதரவாப்போச்சி. இதுவரை பிள்ளை கண்ணில கண்ணீரே பாத்ததில்லை. இப்பிடிப் பிடிவாதம் பிடிக்கானேன்னு அம்மாவுக்கு வருத்தம். காத்துக்கருப்பு எதுவும் பிடிச்சிருச்சான்னு தெரியலயே. ஆனா பயல் அழுது அடம்பிடிக்கான். யாராலயும் அவன சமாதானப்படுத்த முடியல.

சரி அவன் இஷ்டப்படியே செய்வோம்னு பெரிய கல்தொட்டியில இருந்த கழனித்தண்ணிய மேலால மோந்து அதுல கொஞ்சம் கருப்பட்டியைப் போட்டு கலக்கி பயந்துகிட்டே கொண்டு வந்து கழனித்தண்ணிய அவங்கிட்ட கொடுத்தா அம்மாக்காரி.

அதப்பாத்ததும் ஆவலா வாங்கிக் குடிச்ச பயல் முகத்தைச் சுளிச்சான்.

 டவுனில நல்லாச்சூடா கொடுத்தாக அதான் அம்புட்டு ருசியா இருந்துச்சி.. உனக்கு கழனித்தண்ணியே போடத்தெரியலன்னு சொல்லி அதைக் கீழே கொட்டிட்டான். மறுநாள் டவுனிலிருந்து வந்த சீலை வியாபாரி பேச்சோடு பேச்சாக காப்பித்தண்ணியைப் பத்தி சொல்லவும் தான் அம்மாக்காரிக்கு காப்பித்தண்ணி கழனித்தண்ணியான கத தெரிஞ்சது. எல்லாருக்கும் சிரிப்பாணி பொங்கி வந்தாலும் யாரும் சிரிக்கல. பயல் கோவிச்சிகிட்டான்னா என்னசெய்ய?

தவமாய் தவமிருந்து வெளிநாட்டு பத்தியத்துல பெத்தபிள்ளையில்லையா?

 

நன்றி – புக் டே இணைய இதழ்.

Wednesday 6 October 2021

தவளை ராஜாவான கதை

 


தவளை ராஜாவான கதை

உதயசங்கர்

மண்டூர் நாட்டை ஆண்டு வந்த மன்னர் நோய்வாய்ப்பட்டுத் திடீரென்று இறந்து விட்டார். அவருக்கு வாரிசு இல்லாததினால் மக்கள் என்ன செய்வது என்று யோசித்தனர். ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுக்கவேண்டும். உடனே அவர்கள் ராஜகுரு மாமண்டூவைச் சந்தித்தனர். ராஜகுரு ஏதோ புரியாத மொழியில் முணுமுணுத்தார். பரணிலிருந்து பெரிய பெரிய ஓலைச்சுவடிகளை எடுத்து புரட்டினார். பின்னர் கண்ணைமூடி இரண்டு நாட்கள் உட்கார்ந்து விட்டார். சாப்பிடுவதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் மட்டும் கண்களைத் திறந்தார். மக்கள் அவரையே பார்த்துக் கொண்டு காத்திருந்தனர்.

கூட்டம் அதிகமாக அதிகமாக அவரைப் பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. பார்த்துவிட்டுப் போகவேண்டும் என்றால் ஒரு கட்டணம். அங்கேயே இருக்கவேண்டும் என்றால் அதிக கட்டணம். அவசர அவசரமாய் பார்க்கவேண்டுமென்றால் ஒரு கட்டணம் என்று விதவிதமாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. மக்கள் வரிசை வரிசையாக நின்றனர்.

அவர் சொல்லும் வார்த்தைகளில் தான் தங்களுடைய எதிர்காலம் இருப்பதாக மக்கள் நினைத்தனர். ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று. மாமண்டூ ராஜகுரு கண்களைத் திறக்கவில்லை. ஒருவாரத்தை பேசவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து உட்கார்ந்திருந்தார்கள். மாமண்டூ ராஜகுருவே அவருடைய சீடர்கள் மூலம் அவருடைய படங்களை அச்சடித்து விற்க ஏற்பாடு செய்தார். அத்துடன் டீக்கடைகள், ஹோட்டல்கள், சர்பத் கடைகள் எல்லாம் ஆரம்பித்தார். குழந்தைகளுக்கு ராட்டினம் கூட வந்து விட்டது.

எல்லாரும் எப்போது மாமண்டூ ராஜகுரு பேசுவார் என்று காத்துக்கொண்டிருந்தனர்.

“ என்ன பேசிட்டாரா? “

“ என்ன சொல்லிட்டாரா.?.”

“ என்ன  குறிப்பு கொடுத்தாரா? “

“ என்ன சைகை காட்டினாரா? “

என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டே திரிந்தனர். மக்கள், அவரவர் வேலையை விட்டுவிட்டு அங்கு வந்து கிடந்தனர். விவசாயி உழவில்லை. நெசவாளி நெய்யவில்லை. தச்சர் தச்சுவேலை செய்யவில்லை. கொல்லர் நகை செய்யவில்லை. கொத்தனார் கல்லுடைக்கவில்லை. ஆட்டக்காரர்கள் ஆடவில்லை. பாட்டுக்காரர்கள் பாடவில்லை. தகவல் தொழில்நுட்பக்காரர்கள் தகவல் சொல்லவில்லை.

எல்லாரும் ராஜகுரு வாயைப் பார்த்துக் கொண்டேயிருந்தனர்.

மழைக்காலம் தொடங்கியது. மக்கள் எல்லாரும் கலைந்து போகத் தொடங்கினார்கள். உடனே மாமண்டூ ராஜகுரு கண்களைத் திறந்தார். மக்களை ஏற இறங்க பார்த்தார்.

உடனே தரையில் கட்டம் வரைந்து அதற்குள் குறுக்குமறுக்கும் கோடுகள் போட்டார். சோழியைக் குலுக்கிப் போட்டார். தாயக்கட்டையை உருட்டினார். நெற்றியில் கையை மடக்கி வைத்தார். எல்லாத்திசைகளிலும் கைகளை வீசினார். பின்னர் வாயைத் திறந்து,

“ ஏரி.. குளங்களுக்குப் போங்கள்.. அங்கே யார் சத்தமாகப் பேசுகிறார்களோ.. அவரை அழைத்து வாருங்கள்.. அவர் தான் மண்டூர் ராஜா.. “

என்று சொன்னார். அவ்வளவுதான். மக்கள் எல்லாரும் உடனே அந்த நாட்டில் இருந்த ஏரி, குளம், கண்மாய், குட்டை, என்று நீர்நிலைகளுக்குப் படையெடுத்தார்கள். மழைக்காலம் தொடங்கி விட்டதால் தவளைகளின் சத்தம் மட்டும் தான் கேட்டது. வேறு எந்தச் சத்தமும் கேட்கவில்லை.

“ கொர் கொர் கொர்ர்ர்ர்..” என்று மழைக்காலத்தை வரவேற்று தவளைகள் பாடிக்கொண்டிருந்தன. கூட்டமாகச் சத்தம் போட்டதால் யார் அதிகச் சத்தம் போடுகிறார்கள் என்று கணிக்கமுடியவில்லை. அதனால் எல்லாத்தவளைகளையும் பிடித்து பெட்டிகளில் அடைத்து அரண்மனைக்குக் கொண்டு போனார்கள். ராஜகுருவே தேர்ந்தெடுக்கட்டும்.

அரண்மனையில் ஆயிரக்கணக்கான தவளைகள் கொர்ர்கொர்ர் கொர்ர் கிர்ர்ர்க் கிர்ர்க் கிராக்க்.. என்று தவளைகளின் விதவிதமான சத்தங்களால் அரண்மனை ஆடியது. ராஜகுருவுக்குத் தெரியும் யார் ராஜாவாக வந்தாலும் அவருக்குப் பிரச்னையில்லை. அவருடைய பேச்சைக் கேட்டுத் தான் எல்லாரும் நடந்து கொள்வார்கள். அதனால் எல்லாத்தவளைகளையும் அரண்மனை அரச சபையில் விடச்சொன்னார்.

அப்படியே செய்தார்கள். தவளைகள் எல்லாம் கிராக் கிர்ர் கிர்ர்க் கிர்ர்ர் என்று கத்திக்கொண்டே அங்குமிங்கும் தத்தித்தாவிக் குதித்தன. அப்போது சிம்மாசனத்தில் ஒரு பூச்சியைப் பார்த்தது ஒரு தவளை. அவ்வளவுதான். அந்தத்தவளை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க் கிர்ர்ர்ர்ர்ராரரரக் என்று கத்திக் கொண்டே பாய்ந்து சிம்மாசனத்தில் உட்கார்ந்து அந்தப் பூச்சியை தன்னுடைய நாக்கை நீட்டி லபக்கியது. உடனே மாமண்டூ ராஜகுரு ஒரு மாலையை எடுத்துக் கொண்டு வந்து அந்தத் தவளை ராஜாவுக்கு அணிவித்தார்.

மக்கள் எல்லாரும் ” தவளைராஜா வாழ்க! தவளைராஜா வாழ்க! “ என்று வாழ்த்தினார்கள். தவளைராஜாவுக்கு ஒன்றும்புரியவில்லை. பக்கத்தில் எங்காவது பூச்சிகள் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தது.

ராஜகுரு மக்களின் அறியாமையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் அறிவு என்ற சிறுவன் இந்தக்கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ராஜகுருவின் தந்திரம் புரிந்தது. மழைக்காலம் முடிந்ததும் தவளை ராஜா பேசமாட்டார். அப்போது அவருடைய பெயரைச் சொல்லித் தானே ஆட்சி செய்யலாம் என்ற ராஜகுருவின் திட்டத்தை அவன் தெரிந்து கொண்டான்.

உடனே அவன் தவளைமொழி தனக்குத் தெரியும் என்றும் தவளைராஜா சொல்வதை மக்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வதாகவும் சொன்னான். ராஜகுருவால் மறுப்பு சொல்லமுடியவில்லை.

அப்போது தவளைராஜா ஒரு பெண் தவளைக்காகப் பாட்டுப்பாடினார். கிர்ரக்கிர்ராக்கி கிர்ர்கி கீர்ராக்கி கிகிகிர்ர்ர்ர்ர்க்க்க்க்.. என்று பாட்டுப் படித்தார். மக்கள் எல்லாரும்

“ ராஜா என்ன சொல்கிறார்? “ என்று அறிவைப் பார்த்துக் கேட்டனர். அறிவு,

“ அய்யோ! அதை நான் எப்படிச் சொல்வேன்… நம்முடைய ராஜகுரு நாட்டின் அத்தனை செல்வத்தையும் கொள்ளையடித்து பதுக்கி வைத்திருக்கிறார்.. அவரைக் கைது செய்யும்படி.. உத்தரவு போடுகிறாரே ராஜா..

மக்கள் திகைத்துப் போனார்கள். ஆனாலும் ராஜாவின் உத்தரவாயிற்றே. மீற முடியுமா? ராஜகுருவைக் கைது செய்தார்கள். இப்போது மறுபடியும் தவளைராஜா

 கிர்ர்ர்ர்ர்ராக் கிகிகிகிகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று கத்தினார். அறிவு மக்களைப் பார்த்து,

“ ராஜா இனிமேல் மன்னராட்சி கிடையாது.. .. மக்கள் தங்களுக்குச் சேவை செய்ய சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கட்டும்..  அவர்கள் ஆளட்டும்…

உடனே மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

கிராக் கிர்ரக் என்று மறுபடியும் தவளைராஜா கத்தினார்.

உடனே அறிவு,

“ என்னை என் குளத்திலேயே விட்டு விடுங்கள் என்று சொல்கிறார் தவளைராஜா..என்று சொன்னான்.

அப்புறம் என்ன!

மண்டூர் அறிவூராக மாறியது. மக்களை மக்களே ஆட்சி செய்யும் நல்லாட்சி மலர்ந்தது.


நன்றி - பொம்மி சிறுவர் மாத இதழ்